AUTHOR OF THIS STORY - SABARI PARAMASIVAN
தமிழகத்தின் தென்மாவட்டத்தில், ஒரு கிராமத்தில். ஒரு 18 வயது வாலிபன் டீக்கடையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தான். அவனது சிறுவயதிலேயே, அவன் தாய் தந்தையர் இறந்து விட்டனர். இரண்டு சகோதரிகள் மட்டுமே உண்டு. அவனது சகோதரிகள் இருவரும்கூட, அந்த ஊரிலேயே இருக்கும் கடைகளில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இவர்கள் மூவரும் ஈட்டும் வருமானத்தில்தான் அந்தக் குடும்பமே ஓடிக்கொண்டிருந்தது. சிறுவயதிலிருந்தே, ஆசைப்பட்ட எதுவும் கிடைக்காமல், அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல், வறுமையின் பிடியில் அகப்பட்டிருந்த அந்த வாலிபனுக்கு ஒரு பெரிய கனவு இருந்தது.
இப்படி கடைகளில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு, 'ஒரு கடைக்கு உரிமையாளராக வேண்டும்' என்பது அவன் லட்சியமாக இருந்தது. அவன் இருந்த அந்த நிலைமையில் அதை அடைவதென்பது அசாத்தியமென்றே சொல்ல வேண்டும்.
ஆனாலும், அவன் தொடர்ந்து உழைத்துக்கொண்டும், தன்னால் முடிந்த ஒரு சிறு தொகையை சேர்த்துக் கொண்டும் இருந்தான்.
ஒருவழியாக தேவையான தொகை சேர்ந்ததும், வீட்டிலேயே, ஒரு உணவகத்தை ஆரம்பித்தான்.
எல்லோரும் செய்வதை நாமும் செய்தால், நம்மால் எளிதில் முன்னேற முடியாது என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். அந்த ஊரைப் பொறுத்தவரை, மீன் குழம்பு சாப்பாடு என்பதை அதுவரையிலும் எந்த உணவகமும்தங்கள் மெனுவில் சேர்ந்திருக்கவில்லை.
அதைச் செய்தால், தனது வியாபாரம் முன்னேறும் என்பது அவனுக்குப் புரிந்தது. என்னதான், யோசனைகள் இருந்தாலும், வியாபாரத்துக்கு முக்கியம் பணமே. அது இல்லாததால், அவனுக்கு வெற்றியளிக்கும் என்று தெரிந்தும் அந்த திட்டத்தை செயல்படுத்து இருந்தான்.
காலை மற்றும் இரவுச் சிற்றுண்டிகளைச் செய்து, ஒரு உணவகத்தை நடத்த ஆரம்பித்தான்.
ஆனால், அதில் பெரிய அளவு லாபமேதும் இல்லை. அந்த ஊரில், ஏற்கனவே பெயர்வாங்கிய உணவகங்கள் பல இருந்தன. இவனது உணவகம் பெரியதாகவும் இல்லை, சொல்லும்படியான விசேஷ உணவுகளென்று இதுவும்கூட இவனிடம் இல்லை.
அந்த வியாபாரமும் கவிழ்ந்து, 'மறுபடியும் ஆரம்பித்த இடத்துக்கே வந்து நின்று விடுவோமோ' , என்று கலங்கித் தவித்தான்.
அப்படியிருக்கும்போது ஒருநாள், தனது வியாபாரத்துக்குத் தேவையான பண உதவியைப் பெறுவதற்காகத் தனது உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் செல்ல நேர்ந்தது. அது மத்தியான வேளையானதால், அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இவனையும் அழைத்து சாப்பிடச் சொன்னார்கள்.
ஆனால், பரிமாறும்பொழுது மற்றவர்களுக்கெல்லாம் மீன் துண்டங்களும், இவனுக்கு மட்டும் மீன் தலையும் தரப்பட்டன.
பொதுவாகவே, மீன்குழம்பிலுள்ள துண்டங்களைச் சாப்பிடத்தான், அத்தனைபேரும் ஆசைப்படுவார்கள். அவனும்கூட அப்படித்தான் ஆசைப்பட்டான். ஆனால், ஏனோ தெரியவில்லை, அந்த உறவினர் பெண்மணிக்கு இவனுக்கு துண்டங்களைக் கொடுப்பதில் விருப்பம் இல்லை.
அதனால், தலையைப் பரிமாறிவிட்டு "மீன் துண்டங்களைவிட தலைக்குத் தான் ருசி அதிகம். ருசி மட்டுமல்ல சத்தம் கூட அதில் தான் அதிகம். சாப்பிடு. வளருகிற பையன்" , என்று சொன்னார். மீன் தலையில் சத்துள்ளது என்பது உண்மையாக இருந்தாலும்கூட, அந்தப்பெண்மணி அவனை சமாளிப்பதற்காகத் தான், அப்படி கூறினார்.
அடுத்த நாள், காலையில் எழுந்ததும் முதல் வேலையாக, மீன் சந்தைக்குச் சென்றான். அங்கு ஒவ்வொரு கடையிலுமாக விசாரிக்கும்பொழுது, தன்னிடம் இருக்கும் காசுக்கு 'மிகச் சொற்பமான மீன்களை மட்டுமே வாங்க முடியும்' , என்ற உண்மை அவனுக்கு உறைத்தது.
ஆயினும், மனம்தளராது கேட்டுக் கொண்டே இருந்தான். அப்போது, அங்கிருந்த ஒரு பெண்மணி, "தம்பி, ரொம்ப நேரமா சுத்திட்டு இருக்கியே, உன் கையில எவ்வளவு காசுதான் இருக்கு ? " என்றாள்.
அவனிடம் எத்தனை பணம் இருக்கிறது என்று தெரிந்ததும் "உன்னிடம் இருக்கும் காசுக்கு, மீன்களெல்லாம் கிடைக்காது. மீன் வாலோ, இல்லை தலையோ வேண்டுமானால் கிடைக்கும்" என்று சொல்லி, கிண்டலாகச் சிரித்தாள்.
அவள் சிரிக்கவும் அவளருகில் இருந்த மற்றவர்களும் சேர்ந்து சிரித்தார்கள். அவர்களது பரிகாசம் அவனுக்கு வருத்தத்தை அளித்தது. மேலும், அந்த இடத்தில் நிற்க மனமில்லாமல், திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
அந்தச் சந்தையின் வாயிலைத் தாண்டும் முன், இதே மீன் தலையினால், முந்தைய நாள் அந்த உறவினரின் வீட்டில் பாரபட்சம் காட்டியதும் நினைவுக்கு வந்தது. அதே கணத்தில், "மீன் துண்டத்தைவிட தலையில்தான் ருசியும் அதிகம். சத்தும் அதிகம்", என்று அந்த உறவினர் பெண் சொன்ன வாசகமும் அவன் காதில் ஒலித்தது.
உடனடியாகத் திரும்பினான்.
தன்னைக் கிண்டல் செய்த அந்த பெண்ணிடம் சென்றான்.
"என்னிடம் இருக்கும் காசுக்கு இந்தத் தலைகள் கிடைக்கும் என்று சொன்னீர்கள் அல்லவா. இந்தத் தலைகளை என்னிடம் கொடுங்கள்" என்று கேட்டான். அத்தனை பேரும் வியப்பாகப் பார்த்தார்கள்.
"மொத்தமாக, அத்தனை தலையும் வேண்டுமா ? இருப்பதிலேயே, மீன் தலைதான் சுத்தம் செய்வதற்கு கடினமான ஒன்று. இதை சுத்தம் செய்வதற்கே ஒரு நாள் ஆகிவிடுமே. நீ எப்படி கடை நடத்துவாய் ?" என்று கேட்டார் அந்தப் பெண்மணி.
"பரவாயில்லை. தாருங்கள்" என்று பதிலளித்து விட்டு, அவற்றை வாங்கித் தனது வீட்டுக்கு வந்தான் அவன்.
தன் சகோதரியுடன் சேர்ந்து உட்கார்ந்து தானும் அதை சுத்தம் செய்தான். அந்தப் பெண்மணி சொன்னது போலவே, அது கடினமாகத்தான் இருந்தது. ஆயினும், அவர்கள் அதைச் செய்தார்கள். அந்த மீன் தலைகள் அத்தனையையும் போட்டு, மீன் குழம்பு தயார் செய்தார்கள்.
அவன் ஒரு அட்டைப் பலகையை எடுத்து, அதில் "இங்கு மீன் தலைக்குழம்பு கிடைக்கும், தலைக்குழம்புக்கு ருசியும் அதிகம். ஊட்டச்சத்தும் அதிகம். இது இங்கு தவிர வேறெங்கும் கிடைக்காது" என்று எழுதிப் போட்டான்.
அந்தக் கடைக்கு வந்த ஒரு சிலர், அதை விசித்திரமாகப் பார்த்தார்கள். 'சரி எதற்கும் முயற்சி செய்து பார்க்கலாம்' என்று அதை வாங்கி சுவைத்துப் பார்த்தார்கள். உண்மையிலேயே, மீன் தலைக்குழம்புக்கு ருசி அதிகம்தான். ஆகவே, அதன் ருசி அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. பின், தொடர்ந்து அந்தக் கடைக்கு வர ஆரம்பித்தார்கள்.
இந்த வீட்டில், இந்த மாதிரி வித்யாசமான குழம்புவகை கிடைப்பது, அந்த ஊரில் உள்ள மற்றவர்களுக்கும் தெரியவந்தது. புதிதாகப் பலர், இவனது கடைக்கு வர ஆரம்பித்தார்கள்.
போட்டிக்கென மற்ற கடைகள் இதை முயற்சித்தபோதிலும், இவனது குழம்புபோல அவை இல்லை. ஆரம்பத்திலேயே, இதைச்சுவைத்ததால் ஊர்மக்களுக்கு இந்தச் சுவைத்தான் நாக்கிலும் நின்றது. இவனது கடைக்கு 'தலைக் குழம்பு கடை' என்ற பெயரும் கிடைத்தது.
பெருமளவில் லாபம் கிடைக்க, தனது வீட்டில் ஆரம்பித்த கடையைப் புதிதாக ஒரு இடம் பிடித்து ஒரு உணவகமாக உருவாக்கினான். சில ஆண்டுகளில், அந்தச் சிறிய உணவகம் ஒரு பெரிய உணவகமாக மாறியது. பின்னர், பக்கத்து ஊர்களிலுமாகச் சேர்த்து, 4 கிளைகளாக வளர்ந்தது.
தனது சகோதரிகளின் திருமணம், சொந்த வீடு, முன் இருந்ததை விட 10 மடங்கு மேலான ஒரு வாழ்க்கை, தன பிள்ளைகளின் கல்வி என்று அவர் எதிர்பார்த்த எல்லாமே கைகூடின.
ஒன்றுமே இல்லாத நிலையில், "தான் ஒரு முதலாளியாக வேண்டும்" என்று அவன் நினைத்த கனவு பலித்தது.
எந்த இடத்தில், எதை மையமாக வைத்து அவமானப் படுத்தப்பட்டாரோ, அந்த இடத்தில், அதாலேயே அவரது வாழ்க்கை மாறியது.
அவர், தனது குறைவையே தனது வெற்றிக்கான மந்திரமாக மாற்றினார். அதில் கடினங்கள் இருக்கும் என்று தெரிந்தும், மனா உறுதியோடு ஏற்றுக் கொண்டார். "சாத்தியமே இல்லை" என்று பலரும் நினைத்த தருணத்திலும் கூட, அந்தக் குணம்தான் அவரது வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
இன்றும், நம்மில் பலரும்கூட, பல இடங்களில் நமது குறைகளுக்காக பறிக்கப்படுவது உண்டு. பல இடங்களில், "ஸ்டாப்பிங் பாயிண்ட்" அதாவது நம்மை நிறுத்தும் ஒரு தருணங்கள், நம் அத்தனை பேருக்கும் உண்டு.
ஆனால், அந்த ஒரு தருணத்தில், பரிகாசங்களையும் அவமானங்களையும் கஷ்டங்களையும் பொருட்படுத்தாமல், எது நமது பலகீனமாக இருக்கிறதோ, அதையே நமது பலமாக மாற்ற கற்றுக்கொள்ள வேண்டும். நமது தடைகளையெல்லாம், திருப்புமுனையாக மாற்ற, முயற்சி செய்ய வேண்டும்.
எதைச் செய்தால், வெற்றி பெற முடியும் என்பதை யோசித்து, அதை நேசித்து, அதற்காக உழைத்து, வெற்றி காண வேண்டும்.
அப்படி ஒரு வெற்றியை, நீங்கள் விரைவில் காண, என்னுடைய வாழ்த்துக்களும், வேண்டுதல்களும்.
You can see a number of motivational stories in Tamil from this channel, APPLEBOX By Sabari. Those include Motivational Stories of Successful People in Tamil, Motivational Video in Tamil for Students, UPSC Motivational Videos in Tamil, Motivational Stories in Tamil from History, Moral Stories in Tamil and Kutty Stories. ஒரு குட்டிக் கதை is my favorite portion from our channel.
Check these stories also from APPLEBOX
Golden Flower - An interesting Motivational Kutty Story in Tamil
Scared Sheep - An interesting Motivational Kutty Story in Tamil
Alexander Graham Bell - An interesting Motivational Kutty Story in Tamil
Aristotle's Advice to Alexander - An interesting Motivational Kutty Story in Tamil
Magical Watch - An interesting Motivational Kutty Story in Tamil
History of Youtube - An interesting Motivational Kutty Story in Tamil
A Magic Tree - An interesting Motivational Kutty Story in Tamil
Nike Success Story - An interesting Motivational Kutty Story in Tamil
Fish Curry - An interesting Motivational Kutty Story in Tamil
Four Secrets - An interesting Motivational Kutty Story in Tamil