AUTHOR OF THIS STORY - SABARI PARAMASIVAN
ஒரு ஊரில், பரதன் என்று ஒரு நபர் இருந்தார். அவர் தனது வீட்டில் வைத்தே, சிறியதாக ஒரு இட்லி கடை நடத்திக் கொண்டு வந்தார்.
சிறிது நாட்கள் சென்றதும், அதை ஒரு உணவு விடுதியாக மாற்றலாம் என்ற எண்ணம் அவருக்கு வந்தது அதற்காகத் தேடித் தேடி, ஒரு இடத்தையும் கண்டுபிடித்தார். நியாயமான வாடகையில் அந்த இடத்தை தமக்கென அமர்த்திக்கொண்டு, ஒரு உணவு விடுதியைத் தொடங்கினார்.
அந்த உணவு விடுதி அப்பொழுதுதான் அங்கு ஆரம்பிக்கப்பட்டு இருந்ததால், நிறையபேருக்கு அதைப்பற்றித் தெரியவில்லை. அதனால், அது ஓரளவுக்கு சுமாராகவே ஓடிக்கொண்டிருந்தது. பரதன் அதை நினைத்து வருந்திக்கொண்டும், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டும் இருந்தார்.
இப்படியிருக்கும்பொழுது, ஒரு நாளின் மத்தியான வேளையில், ஒரு நபர் அந்தக் கடைக்கு வந்தார். அந்தக் கடையைச் சுற்றிப் பார்த்துவிட்டு, நேரே பரதனின் முன்பு வந்து நின்றார்.
"நீ எப்படி நல்லா இருக்கிறேன்னு நான் பார்க்கத்தானே போகிறேன்" என்று கோபமாகச் சொன்னார்.
பரதனுக்கு ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது.
'நாம் இன்றுதான் இந்த நபரைப் பார்க்கிறோம். நமக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்படியிருக்க, இவர் இப்படி கடுமையாகப் பேசுகிறாரே" என்று குழம்பியபடி நின்றார்.
அந்த நபர் மறுபடியும், "உனக்கு முன்பாக நான்தான் இந்த இடத்தில் கடை நடத்திவந்தேன். என்னைவிட, நீ அதிகமாக வாடகை தருகிறேன் என்று சொன்னதால், இந்தக் கடையின் சொந்தக்காரர் உனக்கு இந்தக் கடையைக் கொடுத்துவிட்டார். உன்னால்தான் எனது குடும்பமே இன்று தவிக்கிறது. என்னுடைய இந்த நிலைமைக்கு, நீதானே காரணம். அதனால்தான் சொல்கிறேன். நிச்சயமாக கடவுள் உனக்கு தண்டனை தருவார்" , என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
இதைக் கேட்டதும் பரதனுக்கு மிகுந்த மன கஷ்டமாகிவிட்டது. உடனேயே, அந்தக் கடையின் சொந்தக்காரரைப் போய் சந்தித்தார். அந்தக் கடையின் பின்னணியை விசாரித்தார். அதற்கு அந்தக் கடையின் சொந்தக்காரர், "அவர் சொல்வது அத்தனையுமே பொய். கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக அவர் எனக்கு வாடகையே தரவில்லை. எனது குடும்பமோ, முற்றிலும் அந்த வாடகையை நம்பித்தான் இருக்கிறது.
பலமுறை அவருக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு, அதன் பின்னர்தான் கடையைக் காலி செய்யச் சொன்னேன். அதன் பின்புகூட, நியாயமான வாடகைக்குத் தான் நான் உங்களுக்கு கடையைத் தந்தேன். என் பக்கம் தவறேதும் இல்லை" , என்று சொன்னார்.
பரதனுக்கோ "இதை நம்புவதா ? அல்லது அந்த நபர் சொன்னதை நம்புவதா ?" , என்று குழப்பமாக இருந்தது.
குழம்பியபடியே, தனது வீடு வந்து சேர்ந்தார். பல நாட்களுக்கு, அந்த நபர் சொன்ன வார்த்தைகள் அவனை உறுத்திக்கொண்டே இருந்தன. அடுத்த சில நாட்களில், அந்தக் கடையின் வியாபாரம் கொஞ்சம் சரியவும், 'ஒருவேளை அந்த நபரின் சாபத்தினால் தானோ !!' , என்று வருந்தினார்.
பேசாமல், அந்த விடுதியை மூடிவிடலாம் என்று கூடத் தோன்றியது, அவருக்கு. பின்னாளில், அவரது முகமே களையிழந்து போனது.
ஒருநாள், வருத்தமாக அமர்ந்திருந்த பரதனிடம், அவனது தாய் வந்து காரணம் கேட்டாள். அவனும் நடந்த அத்தனையும் சொன்னான்.
"நீ வருந்தத் தேவையில்லை. இதற்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த சாபம் எதுவும் உன்னை பாதிக்காது. நீ உனது தொழிலில் மட்டும் கவனம் செலுத்து", என்று அறிவுரை சொன்னாள்.
ஆனாலும், பரதனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த நபர், அன்று சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும், அவனது மனதை விட்டு அகலவேயில்லை. அந்த நபர் சொன்னது போலவே, அவனது கடையும் பாதிக்கப்பட்டதால், அவனது மனம் மிகவும் குழம்பிப்போனது.
இந்த சூழ்நிலையில் ஒருநாள், அவனது உறவினர்கள் சிலர் அவன் வீட்டுக்கு வந்திருந்தார்கள். பொழுதுபோக்கிற்காக, அவர்களை அருகிலிருந்த மிருகக்காட்சி சாலைக்கு அழைத்துச் சென்றான்.
அந்த மிருகக்காட்சி சாலையில், ஒவ்வொரு பகுதியையும் பார்வையிட்டபடி, அனைவரும் நடந்தனர்.
அங்கே ஒரு இடத்தில், செம்மறியாடுகள் பட்டி இருந்தது. அதிலிருந்த செம்மறியாடுகள் அனைத்தும், மெலிந்து போய், பல நாட்கள் சாப்பிடாதவைபோல் தெரிந்தன.
அதைக்கண்ட பரதனின் தாய், அந்தப் பட்டியின் காப்பாளரிடம், "நீங்க இந்த ஆட்டுக்கெல்லாம் ஒழுங்கா சாப்பாடு கொடுக்கிறது கிடையாதா ? எல்லா ஆடும் இப்படி மெலிந்து போய்க் கிடக்குது" என்று கேட்டாள்.
உடனே அந்த காப்பாளர், "இல்லை, அம்மா. இந்த பட்டியைப் பார்த்த நீங்கள், அந்தக் கண்ணாடியைப் பார்க்கவில்லையே" என்று சொல்லிவிட்டு, அந்தப் பட்டியின் எதிரிலிலிருந்த ஒரு கண்ணாடியைக் காட்டினார். அது ஒரு கண்ணாடி. அந்தக் கண்ணாடியில், ஒரு பெரிய கூண்டும், அதில் சுற்றிக்கொண்டிருக்கும் புலியும் தெரிந்தன.
இப்பொழுது அந்த காப்பாளர் சொன்னார், "அம்மா, ஒரு மாதத்துக்கு முன் தான், அந்தக் கூண்டில் ஒரு புலியைக் கொண்டுவந்து அடைத்தார்கள். நமது பட்டியின் எதிரிலிருக்கும் இந்தக் கண்ணாடியில், அந்தப் புலியின் பிம்பத்தைக்கண்டு, இந்த ஆடுகள் அத்தனையும் அஞ்சியிருக்கின்றன போலும். ஒரு மாதமாகவே, இவை சாப்பிடுவதும் இல்லை. நிம்மதியாகத் தூங்குவதுமில்லை. அதனால்தான், இப்படி மெலிந்து போயிருக்கின்றன.
இப்பொழுதுதான், நாங்கள் இதைக் கண்டறிந்திருக்கிறோம். அடுத்த வாரத்தில், அந்தக் கண்ணாடியை நீக்கிவிடுவோம். இந்த ஆடுகள் தேறிவிடும்" என்று சொன்னார்.
இதை கேட்டதும், அருகிலிருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர்.
பரதனும் சிரித்தபடியே தன் தாயிடம், "முட்டாள் செம்மறியாடு. கூண்டில் இருக்கும் புலி, அதை என்னதான் செய்துவிடப் போகிறது. அது தெரியாமல், இப்படி பயத்திலேயே மெலிந்து கொண்டிருக்கிறதே" என்றான்.
அவன் தாயும் சிரித்துக்கொண்டே சொன்னாள், "பரதா, ஆறறிவுள்ள உனக்கே நான் இதைச் சொன்னபோது மண்டையில் ஏறவில்லையே. இந்த ஐந்தறிவு ஜீவனுக்கு எப்படி ஏறும் ?" என்று.
குழம்பியபடியே விழித்தான், பரதன்.
"உனது உணவு விடுதியும்கூட, யாரோ ஒருவர் விட்ட சாபத்தினால் பாதிக்கப்படவில்லை. அந்த சாபம் பலித்துவிடுமோ என்ற உனது பயத்தினாலும், அதே சிந்தனையில், நீ உன் தொழிலில் கவனம் செலுத்தாததாலும்தான், உனது விடுதி பாதிக்கப்பட்டது" , என்று சொல்லிவிட்டு தொடந்து நடந்தாள், அவள்.
பரதனும், இத்தனை நாட்களும் நான் கவலைப்பட்டது எத்தனை முட்டாள்தனம் என்று நினைத்துக்கொண்டு, தனது தவறை உணர்ந்தபடியே, அவள் பின்னால் நடந்தான்.
இந்த கதையில் வருவது போலத் தான், நாமும். சில நேரங்களில், யாராவது ஒருவர் காரணமே இல்லாமல், நமக்கு அளித்த சாபத்தை நினைத்து, வருந்திக் கொண்டிருப்போம். அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதைக்கூட நம்மால் சிந்திக்கமுடியாதபடி நமது நிலை ஆகிவிடும். பரதனைப்போல, பலரும் இழப்புக்குகூட ஆளாகியிருக்கலாம்.
ஆனால், தயவுசெய்து ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். எந்தத் தவறும் செய்யாத நிலையில், யார் ஒருவர் நமக்கு அளித்த சாபமும், நமக்கு பலிக்காது.
பொதுவாக, பல நேரங்களில், நமது சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாமல், நமது நிலைமையைப் புரிந்துகொள்ளாமல்தான், இந்த மாதிரி சிலர் சாபங்களைத் தருகிறார்கள். எதிர்மறையான வார்த்தைகளைச் சொல்கிறார்கள். எப்படி, கூண்டில் இருக்கும் ஒரு புலியால், அந்த ஆடுகளுக்கு எந்த பாதிப்பும் வராதோ, அதுபோல, காரணமில்லாது இடப்படும் சாபத்தால், எந்த பாதிப்பும் நமக்கு வராது.
இந்தக் கதையை படித்துக் கொண்டிருக்கும் நீங்கள், ஒருவேளை அந்த மாதிரியான காரணமில்லாத சாபங்களுக்கு பயந்து கொண்டும், அதற்காக வருந்திக் கொண்டு இருக்கிறீர்கள் என்றால், ஒன்றுமட்டும் செய்யுங்கள்.
"உங்கள் மீது தவறு இருக்கிறதா ? " , என்று தீர ஆராய்ந்து பாருங்கள். உங்கள் மனம் அதற்கான பதிலைச் சொல்லிவிடும். உங்கள் மீது தவறு இருந்தால், அதை எப்படி சரி செய்வது என்று பாருங்கள். உங்கள் மீது எந்தத் தவறும் இல்லாத பட்சத்தில், யாருடைய எதிர்மறையான வார்த்தையும் உங்களை பாதிக்காது என்பதை உங்கள் மனதிடம் சொல்லுங்கள்.
உங்களை மீறி, உங்கள் வாழ்வில் எதுவும் நடக்காது. அதனால் அந்த வார்த்தைகளைப் புறந்தள்ளிவிட்டு, உங்கள் வாழ்க்கையை பாருங்கள். இனி ஒருமுறை, யாராவது உங்களைப் பார்த்து எதிர்மறையான வார்த்தைகளைச் சொல்லும்பொழுது, இந்தக் கதையும் பரதனும் உங்களுக்கு ஞாபகத்துக்கு வரட்டும். இந்தக் கதை உங்களுக்கு மன அமைதியைத் தந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
You can see a number of motivational stories in Tamil from this channel, APPLEBOX By Sabari. Those include Motivational Stories of Successful People in Tamil, Motivational Video in Tamil for Students, UPSC Motivational Videos in Tamil, Motivational Stories in Tamil from History, Moral Stories in Tamil and Kutty Stories. ஒரு குட்டிக் கதை is my favorite portion from our channel.
Check these stories also from APPLEBOX
Golden Flower - An interesting Motivational Kutty Story in Tamil
Scared Sheep - An interesting Motivational Kutty Story in Tamil
Alexander Graham Bell - An interesting Motivational Kutty Story in Tamil
Aristotle's Advice to Alexander - An interesting Motivational Kutty Story in Tamil
Magical Watch - An interesting Motivational Kutty Story in Tamil
History of Youtube - An interesting Motivational Kutty Story in Tamil
A Magic Tree - An interesting Motivational Kutty Story in Tamil
Nike Success Story - An interesting Motivational Kutty Story in Tamil
Fish Curry - An interesting Motivational Kutty Story in Tamil
Four Secrets - An interesting Motivational Kutty Story in Tamil